செல்லப்பிராணிகள்

விலங்குகளை வளர்க்கும் யாவரும் பல்வேறு விதிகளை கடைபிடிக்க வேண்டும். சில விலங்கு இனங்கள் குடியிருப்பில் வைக்க அனுமதிக்கப்படாது. நாய் உரிமையாளர்கள் நாய்க்கான வரி செலுத்த வேண்டும்.

செல்லப்பிராணிகளை வைத்திருத்தல்

கினிப் பன்றிகள், வெள்ளெலிகள், கேனரிகள் அல்லது மீன் போன்ற சிறிய செல்லப்பிராணிகளை வைத்திருக்க வாடகை குடியிருப்பில் வசிக்கிறவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

இருப்பினும், வாடகை ஒப்பந்தத்தில் பூனைகள் அல்லது நாய்கள் போன்ற பெரிய விலங்குகளை வைத்திருப்பதை வீட்டு உரிமையாளர்கள் தடை செய்யலாம். அவர்கள் சத்தம் போடுகிற அல்லது ஆபத்தான விலங்குகளை தடை செய்யலாம். செல்லப்பிராணியை வளர்ப்பதற்கு முன், உங்கள் வீட்டு உரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும்.

கூடுதலாக, விலங்கு உரிமையாளர்கள் கூட்டாட்சி விலங்கு பாதுகாப்பு சட்டங்களுக்கு இணங்க வேண்டும். உதாரணமாக, சில விலங்கு இனங்களை தனியாக வைக்கக்கூடாது (எ.கா. முயல்கள்) அல்லது சிலவற்றை பெரிய கூண்டுகளில் மட்டும் தான் வைக்க அனுமதிக்கப்படும்.

பல (அயற்பண்புடைய) விலங்குகள் சுவிட்சர்லாந்திற்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாது. மற்றவற்றிற்கு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் கால்நடை அலுவலகத்தின் சிறப்பு அனுமதி (Service de la consommation et des Affairs vétérinaires - SCAV) தேவை.

நாய்கள்

ஜூரா மாகாணத்தில் நாய்களுக்கான சிறப்பு விதிகள் உள்ளன:

அனைத்து நாய்களும் தோலின் கீழ் மைக்ரோசிப் மூலம் குறிக்கப்பட வேண்டும். அவை பதிவு செய்யபட வேண்டும். உரிமையாளர் நாய்க்கான அடையாள அட்டையைப் பெறுவார்.

நினைவில் கொள்க: இந்த கார்டு வெளிநாட்டு பயணத்திற்கு தேவையான செல்லப்பிராணி பாஸ்போர்ட்டிற்கு ஒத்ததாக இருக்காது.

நீங்கள் வசிக்கும் நகராட்சியில் நாய்கள் பதிவு செய்யப்பட வேண்டும். ஆண்டுதோறும் நாய்க்கான வரி செலுத்த வேண்டும்.

அனைத்து நாய் உரிமையாளர்களும் தங்கள் நாயின் மலத்தை எடுத்து அப்புறப்படுத்த வேண்டும்.

இல்லையெனில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

நாய்களுக்கான பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

பிட்புல்ஸ் அல்லது ரோட்வைலர் போன்ற சில நாய் இனங்களுக்கு, சிறப்பு அனுமதி தேவை.

உங்கள் கால்நடை மருத்துவரிடம் இருந்து கூடுதல் தகவல்களைப் பெறலாம்.