ரயில் மற்றும் பேருந்து

சுவிட்சர்லாந்தில், பொது போக்குவரத்து மிகவும் சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது. பொது போக்குவரத்து மூலம் நீங்கள் கிட்டத்தட்ட எந்த இடத்தையும் அடையலாம். ரயில்கள் மற்றும் பேருந்துகள் அடிக்கடி இயக்கப்படுகின்றன. மேலும் அவை சரியான நேரத்தில் வருகின்றன.

பொது போக்குவரத்து

சுவிட்சர்லாந்தில், பொது போக்குவரத்து மிகவும் முக்கியமானது. பலர் ரயில் அல்லது பேருந்தில் பயணம் செய்கிறார்கள். நாம் கிட்டத்தட்ட எந்த இடத்தையும் ஒரு மணி நேரத்தில் பல முறை அடையலாம். டிக்கெட்டுகள் ஓரளவுக்கு விலை உயர்ந்தவை. ஆனால் பணத்தை மிச்சப்படுத்த தள்ளுபடி டிக்கெட் அல்லது சீசன் டிக்கெட் போன்ற பல வழிகள் உள்ளன.

CFF ன் (சுவிஸ் ரயில்வேஸ்) ½ கட்டண சீசன் டிக்கெட் மூலம், சுவிட்சர்லாந்து முழுவதும் பாதி விலையில் பயணம் செய்யலாம்.

டிக்கெட்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகள்

ரயிலில் பயணிக்க, புறப்படுவதற்கு முன் டிக்கெட் வாங்க வேண்டும். ரயில்களில் டிக்கெட் வாங்க முடியாது.

பேருந்துகளுக்கு, டிக்கெட்டை பேருந்துகளிலேயே வாங்கலாம்.

அனைத்து ரயில் நிலையங்களிலும் டிக்கெட் இயந்திரங்கள் இருக்கின்றன. பெரிய ரயில் நிலையங்களில், டிக்கெட் கவுண்டர்களும் உள்ளன. டிக்கெட்டுகளை CFF வலைத்தளத்திலோ அல்லது மொபைல் போன் மூலமாகவோ ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.

(Mobile CFF, FAIRTIQ போன்ற) பல செயலிகளின் மூலம், டிக்கெட்டை எளிதாக நம் மொபைல் போனில் வாங்கலாம்.

ரயில் அல்லது பேருந்தில் அடிக்கடி பயணம் செய்யும் பெரியவர்களுக்கு

பல்வேறு வகையான சீசன் டிக்கெட்டுகள் உள்ளன:

  • ஒரு குறிப்பிட்ட பாதைக்கான சீசன் டிக்கெட் (எ.கா., வீடு - பணியிடம்)
  • ஒரு குறிப்பிட்ட மண்டலத்திற்கான சீசன் டிக்கெட் (எ.கா., ஜூராவில் உள்ள Vagabond (ஊர்சுற்றி) பாதை வலையமைப்பு)
  • சுவிட்சர்லாந்து முழுவதற்குமான சீசன் டிக்கெட் (அனைத்து CFF சீசன் டிக்கெட்)

சீசன் டிக்கெட்டுகளை வேறொரு நபருக்கு மாற்ற முடியாது.

(டிக்கெட் பரிசோதகரால் கோரப்பட்டால் தன் அடையாள அட்டையை காட்டுதல் மூலம்) சீசன் டிக்கெட் வைத்திருப்பவர் தன் அடையாளத்தை நிரூபிக்க முடிய வேண்டும்.

குழந்தைகளுக்கு

6 வயது வரையிலான குழந்தைகளுக்கு பயணம் இலவசம்.

16 வயது வரை, குழந்தைகள் குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்.

உதாரணமாக, பெற்றோருடன் இருந்தால் "ஜூனியர்" அட்டையுடன் அல்லது மற்றொரு பெரியவர் உடன் இருந்தால் "துணையுடன் குழந்தை" அட்டையுடன்.

டிக்கெட்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகள் பற்றிய கூடுதல் தகவல்களை Chemins de fer fédéraux (CFF) (ஒன்றிய இருப்புப் பாதை), Chemins de fer du Jura (CJ)( ஜூரா இருப்புப் பாதை) அல்லது பேருந்து நிறுவனத்தின் (Mobiju) வலைத்தளங்களில் அல்லது நேரடியாக ஒரு நிலையத்தில் உள்ள டிக்கெட் அலுவலகத்தில் காணலாம்.

ஜூரா காந்தோனில் : Réseau Vagabond (ஊர்சுற்றி பாதை வலையமைப்பு)

நாம் ஜூரா காந்தோனிற்குள் சுதந்திரமாக பயணிக்க ஒரு பாஸ் வாங்கலாம். இது ஊர்சுற்றி பாஸ் என்று அழைக்கப்படுகிறது.

நம் தேவைகளைப் பொறுத்து ஒன்று அல்லது பல மண்டலங்களுக்கு பாஸ் வாங்கலாம்.

நாம் அதை ஒரு மாதத்திற்கோ அல்லது வருட முழுவதிற்குமோ வாங்கலாம்.

நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட மண்டலங்களுக்கு வெளியே பயணம் செய்தால், மற்றொரு டிக்கெட் வாங்க வேண்டும்.

கொம்யூன்களின் நாளாந்திர பாஸ்கள்

சுவிட்சர்லாந்து முழுவதும் ஒரு நாள் சுதந்திரமாகப் பயணிக்க, carte journalière dégriffée (நாளாந்திர மலிவுவிலை பாஸ்) வாங்கலாம். இவை பல கொம்யூன்களில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. மேலும் தகவலுக்கு, உங்கள் கொம்யூனைத் தொடர்பு கொள்ளவும்.

அவற்றுக்கு அதிக தேவை இருப்பதால், முன்கூட்டியே முன்பதிவு செய்வது நல்லது.

CFF வலைத்தளத்திலும் மலிவுவிலை பாஸ்களைப் பெறலாம்.

இந்த வலைத்தளத்தில், அவற்றை எவ்வளவு சீக்கிரமாக வாங்குகிறீர்களோ, அவ்வளவு விலை குறைவாக இருக்கும்.

Noctambus (இரவு பேருந்து)

ஜூரா காந்தோனில், வார இறுதி நாட்களில் சில பேருந்துகளும் ரயில்களும் இரவு வெகுநேரம் வரை ஓடுகின்றன. இவை இரவு பேருந்துகள்.

வழக்கமான டிக்கெட், ½ கட்டண டிக்கெட், பொது சீசன் டிக்கெட் (AG), இரவு சீசன் டிக்கெட் அல்லது வாகாபாண்ட் டிக்கெட் ஆகியவை இரவு பேருந்துகளில் செல்லுபடியாகும்.

கூடுதல் கட்டணம் தேவையில்லை.