மொழி

ஜூரா காந்தோன் பிரெஞ்சு மொழி பேசும் காந்தோன்: மக்கள் பிரெஞ்சு மொழி பேசுகிறார்கள். இதில் ஜெர்மன் மொழி பேசும் ஒரே ஒரு கொம்யூன் உள்ளது: எடர்ஸ்வைலர் (Ederswiler). மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கும், பயிற்சி பெறுவதற்கும் அல்லது வேலை தேடுவதற்கும் பிரெஞ்சு மொழியைக் கற்றுக் கொள்வது முக்கியம்.

சுவிட்சர்லாந்தில் உள்ள மொழிகள்

சுவிட்சர்லாந்தில், 4 தேசிய மொழிகள் உள்ளன: பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன் மற்றும் ரோமன்ஷ். ஒவ்வொரு பிராந்தியமும் இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளில் பேசுகிறது.

ஜூரா காந்தோனில், மக்கள் பிரெஞ்சு மொழி பேசுகிறார்கள். இந்த வேறு காந்தோன்களில், பிரெஞ்சு மொழியும் பேசப்படுகிறது: நஷத்தல் (Neuchâtel), வோத் (Vaud) மற்றும் ஜெனேவ் (Genève). பெர்ன் (Berne), ஃப்ரிபோர்க் (Fribourg) மற்றும் வலே (Valais) காந்தோன்களில், பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகள் பிராந்தியத்தைப் பொறுத்து பேசப்படுகின்றன. பிரெஞ்சு மொழி பேசப்படும் சுவிஸ் பகுதி சுவிஸ் ரோமாந்த் அல்லது ரோமாந்தி என்று அழைக்கப்படுகிறது.

பிரெஞ்சு

ஜூரா காந்தோனில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்வது முக்கியம். நிர்வாகத்திலும், பள்ளிகளிலும், அன்றாட வாழ்க்கையிலும் இது முக்கிய மொழியாகும்.

உரைவிளக்கம் மற்றும் மொழிபெயர்ப்பு

நீங்கள் சுவிட்சர்லாந்திற்கு வரும்போது, ​​ உங்களுக்கு பிரெஞ்சு மொழி தெரியாது அல்லது அது சரியாகப் புரியாது. ஆனால் பெரும்பாலும், ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்வது அவசியம்.

எளிமையான சூழ்நிலைகளுக்கு, நீங்கள் மொழிபெயர்க்க உதவுமாறு நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது உங்கள் சமூகத்தில் உள்ளவர்களிடம் கேட்கலாம்.

ஆனால் முக்கியமான அல்லது தனிப்பட்ட உரையாடல்களுக்கு (உதாரணமாக, ஒரு மருத்துவருடன், பள்ளியில் அல்லது உத்தியோக பூர்வ ஆவணங்களுக்கு), தொழில்முறை உரைபெயர்ப்பாளரை அழைப்பது நல்லது.

Caritas Suisseன் "ஒருவரையொருவர் புரிந்து கொள்தல்" சேவையானது தொழில்முறை உரைபெயர்ப்பாளர்களை வழங்குகிறது.

அவர்கள் சமூக உரைபெயர்ப்பாளர்கள். சிலர் உங்கள் நாட்டிலிருந்து வருகிறார்கள். அவர்கள் உங்கள் மொழியைப் பேசுகிறார்கள், உங்கள் கலாச்சாரத்தையும் அறிவார்கள். அவர்கள் நேரில், தொலைபேசி அல்லது வீடியோ மூலம் வேலை செய்கிறார்கள். இந்த உரைபெயர்ப்பாளர்கள் சிறப்பு நடைமுறைகளிலும் உங்களுக்கு உதவ முடியும்.