வேலையின்மை காப்பீடு

அனைத்து ஊழியர்களும் வேலையின்மைக்கு எதிராக காப்பீடு செய்யப்பட்டுள்ளனர். நீங்கள் வேலையை இழந்தால், குறிப்பிட்ட காலத்திற்கு நிதி உதவி பெறலாம். இதைச் செய்ய, Office Régional de Placement (ORP)-ல் (பிராந்திய வேலைவாய்ப்பு அலுவலகம்) பதிவு செய்ய வேண்டும். ORP கள் வேலையில்லாதவர்களுக்கு ஆலோசனை வழங்குவதோடு அவர்களின் வேலை தேடலுக்கு உதவுகின்றன.

வேலையின்மை காப்பீடு

அனைத்து ஊழியர்களும் வேலையின்மை காப்பீட்டிற்கு (AC) பங்களிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும், பணியாளரின் சம்பளத்தில் ஒரு பகுதி AC நிதிக்காக பிடிக்கப் படுகிறது. இது பங்களிப்பு நிதியில் பாதி. மறு பாதியை நிறுவனம் செலுத்தும்.

நீங்கள் வேலையை இழந்தால், வேலையின்மை நிதியிலிருந்து வேலையின்மை சலுகைகளைப் பெறுவீர்கள். வேலையின்மை சலுகைகளின் அளவு பல்வேறு அளவுகோல்களைப் பொறுத்தது.

நீங்கள் சுயதொழில் செய்பவரா?

அப்படியானால் வேலையின்மை காப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியாது.

வேலையில்லாமல் இருக்கிறீர்களா? என்ன செய்ய வேண்டும்?

வேலையை இழக்கப் போகிறீர்களா? வேலையை இழந்துவிட்டீர்களா? அப்படியென்றால்,. மிக அருகிலுள்ள Office régional de placement (ORP) (பிராந்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தில்) கூடிய விரைவில் பதிவு செய்யுங்கள்.

Jobroomல் ஆன்லைனில் பதிவு செய்யுங்கள்.

குறிப்பு: வேலையை இழக்கப் போகிறீர்கள் என்று அறிந்தவுடன் எங்களுக்குத் தெரிவிக்கவும். முடிந்த வரை, வேலையின்மையின் முதல் நாளுக்குள்.

ORP உங்களுக்கு தகவல் மற்றும் ஆதரவை வழங்கும்.

Offices régionaux de placement (ORP) (பிராந்திய வேலைவாய்ப்பு அலுவலகங்கள்)

L'Office régional de placement (ORP) (பிராந்திய வேலைவாய்ப்பு அலுவலகம்) உங்களுக்கு ஆலோசனை வழங்கி, வேலையை விரைவாகக் கண்டுபிடிக்க உதவுகிறது.

நீங்கள் வேலையின்மை சலுகைகளைப் பெற்றால், நேர்காணல்களில் கலந்து கொள்ள வேண்டும். இது கட்டாயமாகும்.

ORP பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு படிப்புகள் மற்றும் திட்டங்களையும் வழங்குகிறது. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலையைப் பொறுத்து, சில கட்டாயமாகும், மற்றவை கட்டாயமில்லை.

நீங்கள் சுவிட்சர்லாந்தில் இன்னும் வேலை செய்யவில்லையா? வேலை தேடுகிறீர்களா?

நீங்கள் ORP இல் பதிவு செய்யலாம். உதாரணமாக, உங்கள் CV ஐ எவ்வாறு எழுதுவது என்பது குறித்த ஆலோசனைகளைப் பெறலாம். ஆனால், நீங்கள் வேலையின்மை சலுகைகளைப் பெற மாட்டீர்கள்.